Tuesday, January 12, 2010

போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்றத்தை அமைக்க பிரான்ஸ் திட்டம்


உள்நாட்டிலும், அனைத்துலகிலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக நீதிமன்றம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் கடந்த புதன்கிழமை (6) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வொசிங்டன் போஸ்ட் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளதாவது:
உள்நாட்டிலும், அனைத்துலகத்திலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கான தண்டணைகளை வழங்கும் பொருட்டு நீதிமன்றம் ஒன்றையும், நீதியாளர் குழு ஒன்றையும் அமைப்பதற்கு பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் இந்த முடிவு பிரான்ஸ் இற்கும் சிறீலங்கா போன்ற போர்க்குற்றங்களை மேற்கொண்ட நாடுகளிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தலாம். சிறீலங்கா அரசின் மீது இனச்சுத்திகரிப்பு மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் பிரித்தானியா இந்த நடைமுறைகளை கொண்டுள்ளது. பிரித்தானியா அரசு உலகில் நடைபெறும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய முடியும்.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்ரேலிய அரசு காசா பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் 1,400 பலஸ்த்தீன மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் உட்பட பல படை அதிகாரிகள் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
பிரித்தானியாவின் சட்டங்களை போலல்லாது, தமது நாட்டுக்கு வெளியிலும் விசாரணைகளை மேற்கொண்டு தண்டணைகளை வழங்கும் திட்டத்தை பிரான்ஸ் நடைமுறைப்படுத்த உள்ளது.
பிரான்ஸ் மனித உரிமைகளின் தாயகம். எனவே இனச்சுத்திகரிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் போன்றவற்றை மேற்கொள்பவர்களை நாம் பாதுகாக்கப்போவதில்லை என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் மற்றும் நீதி அமைச்சர் மைகேல் அலியட் மரியோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
போர்க்குற்றங்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரான்ஸ் இன் இந்த அறிவித்தலை பிரான்ஸில் உள்ள தமிழ் அமைப்புக்கள் வரவேற்றுள்ளன. உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் அமைப்புக்களின் உதவியுடன் தகவல்களை திரட்டி எதிர்வரும் வாரம் டப்பிளின் நகரில் நடைபெறவுள்ள போர்க்குற்ற விசாரணைகளின் போது சமர்ப்பிப்பதற்கு தாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment