Thursday, January 14, 2010

எங்கள் சமுதாயம் ஏழா யிரமாண்டு திங்கள்போல் வாழ்ந்து செங்கதிர்போல் ஒளிவீசும் மங்காத போர்க்களத்தும் மாளாத வீரர்படை கங்குல் அகமென்றும் காலைப் புறமென்றும் பொங்கி விளையாடிப் புகழேட்டிற் குடியேறித் தங்கி நிலைத்துத் தழைத்திருக்கும் காட்சிதனைக் கண்காண வந்த கலைவடிவே நித்திலமே! பொங்கற்பால் பொங்கிப் பூவுதிர்ப்பாய் தைப்பாவாய்! (கவியரசு கண்ணதாசன்)


தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் இன்ப நாள். ஆனால் இன்று எமது தாயக உறவுகள் இந்தப் பொங்கல் நன்னாளை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத மன நிலையில் இருக்கிறார்கள்.
குறிப்பாக வன்னி முகாம்களில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்னமும் முடங்கிக் கிடக்கும் ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான மக்களும் போர் காரணமாக வடக்கிலும் – கிழக்கிலும் இடம்பெயர்ந்து முகாம்களிலும் உற்றார் உறவினர்களோடும் வாழும் இரண்டு இலட்சம் மக்களும் பொங்கல் புத்தாண்டை கொண்டாடும் மன நிலையில் இல்லை. பிறக்கப் போகும் இந்தத் தைப் பொங்கல் புத்தாண்டுக்குப் பின்னராவது எமது உறவுகள் வாழ்வில் எதிர்காலத்துக்கான நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என நம்புகிறோம்.
உலகளாவிய ஏழு கோடி தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தன்மானத்தோடும் செல்வச் செழிப்போடும் வாழும் நாளே எமக்கெல்லாம் இனிய பொங்கல் புத்தாண்டு ஆகும். .
பொங்கல் புத்தாண்டு விழாவானது களனி திருத்தி, வயல் உழுது, எரு இட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைத்து, களை எடுத்து,விளைந்த நெல்மணிக் கதிர்களை அரிவி வெட்டி, சூடு மிதித்து, நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து கூடையில் போட்டு பின்னர் அதில் கொஞ்சம் எடுத்து உரலில் போட்டுக் குத்தி அரிசியாக்கி, புதுப்பானையில் பாலும் சர்க்கரையும், பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி, மஞ்சளும், இஞ்சியும், கரும்பும், கற்கண்டும் இயற்கைத் தெய்வமான ஞாயிறுகுப் படைத்து மனைவியும் மக்களும் கொண்டாடி மகிழும் விழா ஆகும்!
அறுவடைக்கு முன்னதாக நல்ல நாளில் வயலில் தலைசாய்த்து காற்றினால் தலையசைத்து நிற்கும் நெல்மணிக் கதிர்களில் கைப்பிடி அரிந்து தட்டில் எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டுவார்கள். இதற்குப் புதிர் எடுத்தல் என்று பெயர். பின்னர் தைப்பூசத் திருநாளில் புதிர் குழைத்தல் இடம்பெறும். புத்தரிசி பொங்கி, சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்துப் படைக்கும் இப்புதிர் சோற்றை சுற்றமும் நட்பும் சூழ இருந்து உண்டு மகிழ்வர்.
பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயல் உழவும், வண்டி இழுக்கவும், பால், தயிர், நெய் கொடுக்கவும், எரு எடுக்கவும் காரணமாக இருந்த எருதுகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குங்குமம், சந்தனம், மலர் மாலைகளால் அலங்கரித்து குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர்.
உழவன் கமத்துக்கு துணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இ;ந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படும்.
பொங்கல் நாளை “மகரசங்கிராந்தி”யாகப் புராணிகர்கள் மாற்ற முற்பட்டபோதும் அடிப்படையில் பொங்கல் உழவர் விழாவாகவே உயர்ந்தும் நிலைத்தும் உள்ளது.
ஞாயிறு வணக்கம் இயற்கை வழிபாடு ஆகும். உலக நாகரிகங்கள் எல்லாவற்றிலும் ஞாயிறு வணக்கம் இருந்ததற்கு சான்றுகள் இருக்கின்றன. உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக ஞாயிறு இருப்பதால் ஆதி மனிதன் ஞாயிற்றைக் கடவுளாக உருவகப்படுத்தி வணங்கிப் போற்றி வந்ததில் வியப்பில்லை.
வேத காலந்தொட்டு இந்திரனுக்கும், அக்கினிக்கும் அடுத்த தெய்வமாக ஞாயிறு விளங்குகின்றான். ஒரு காலத்தில் ஞாயிறு முதல் தெய்வமாகவே வணங்கப்பட்டு வந்தது. அதுவே இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான சௌர மதம் ஆகும். பிற்காலச் சோழர் காலத்தில் சூரியனுக்குத் தனிக் கோவில்கள் எழுப்பப்பட்டன.
முத்தமிழ்க் காப்பியங்களில் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் -
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு
மேருவலம் திரிதலான்.
(சிலம்பு 1, 4-6)
என ஞாயிற்றை வாழ்த்திப் போற்றுகிறார். காவிரி ஆற்றையுடைய நாடனாகிய சோழனது ஆணைச் சக்கரம் போன்று பொன் உச்சியை உடைய இமயமலையை வலம் வருதலால் ஞாயிற்றை வணங்குவோம்! ஞாயிற்றை வணங்குவோம்!
தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில், சமயசார்பற்ற எல்லோருக்கும் பொதுவான விழா பொங்கல் திருநாளாகும். பொங்கல் விழாவில் கற்பனைக்கோ, புனைவுகளுக்கோ, அருவருக்கத்தக்க, பகுத்தறிவுக்குப் பொருந்தாத கட்டுக் கதைக்கோ இடமில்லை.
தைப்பொங்கல் திருநாளுக்கு வானவியல் அடிப்படையும் இருக்கிறது. தென்திசை நோக்கி நகர்ந்த கதிரவன் (பூமியில் இருந்து பார்க்கும்போது) இந்நாளில் (யனவரி 14) வடதிசை நோக்கி பன்னிரண்டு ஓரைகளில் (இராசிகளில்) ஒன்றான மகர ஓரையில் புகுகின்றது.
உண்மையில் ஞாயிறு மகர ஓரையில் புகும் நாள் டிசெம்பர் 21 ஆகும். சித்திரை நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து காலத்தை கணிக்கும் இந்திய சோதிடம் புவி தனது அச்சில் சுழலும் போது ஈர்ப்புவிசையினால் ஏற்படும் பின்னோட்டத்தை (precession of the equinoxes)  கணக்கில் எடுக்காததால இந்தத் தவறு நேரிடுகிறது. புவி ஞாயிறு மற்றும் நிலா இரண்டின் ஈர்ப்புக் காரணமாக தனது அச்சில் தள்ளாடுகிறது (wobble),   இதனால் புவியின் சுற்று வேகம் தடைபடுகிறது. அதன் அச்சு மேற்கு நோக்கி 50.26 ஆர்க் வினாடி தள்ளப்படுகிறது. 71.5 ஆண்டுகளில் ஒரு பாகை தூரம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது இன்று 24 பாகை அல்லது 24 நாள் வேற்றுமை ஏற்பட்டுவிட்டது. இதனை அயனாம்சம் எனக் குறிப்பிடுகிறார்கள். புவி தனது அச்சில் 23.5 பாகை சாய்ந்திருப்பதால்தான் பருவங்கள் ஏற்படுகிறது.
தமிழர்கள் கொண்டாடும் தீபாவளி தமிழ் அரசன் ஒருவனையே கடவுள் அவதாரம் சூழ்ச்சியால் கொலை செய்த நாளாகும்.
புராணக் கதைகள் எல்லாமே பொதுவாக ஆரிய-திராவிடப் போராட்டங்களைச் சித்தரிப்பதாகும். கொல்லப்படுகிற திராவிடர்கள் அசுரர்கள், இராட்சதகர்கள், இயக்கர்கள் என இழிவாகச் சித்தரிக்கப்பட்டார்கள். அவர்களை பெரும்பாலும் கடவுள் அவதாரங்கள் சூழ்ச்சியாலேயே கொலை செய்தார்கள். திருப்பால் கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த கதை, மாபலி மற்றும் இரணியன் கதைகள் இதற்கு எடுத்துக் காட்டாகும்.
பொங்கல் நாள் விடுதலைப் புலிகளின் தலைசிறந்த தளபதி கேணல் கிட்டு மற்றும் அவரது தோழர்களான மேஜர் வேலன், கேணல் குட்டிஸ்ரீ, கடற்புலி கப்டன் றோசான், கடற்புலி கப்டன் அமுதன், கடற்புலி லெப். நல்லவன், கடற்புலி கப்டன் குணசீலன், கடற்புலி கப்டன் நாயகன், கடற்புலி கப்டன் ஜீவா வங்கக் கடலில் வீரமரணம் எய்திய நினைவு நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு அடுத்த நாள் (தை 02) பொதுமறை தந்த திருவள்ளுவர் பிறந்த நாள்.  அவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என தமிழ் அறிஞர்களால் கொள்ளப்பட்டு தை 02 திருவள்ளுவர் ஆண்டாகக் (2032) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழ் நாட்டில் விடுமுறை நாளாகும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. இந்தப் புத்தாண்டில் ஆவது தமிழீழ உறவுகளது வாழ்வில் அல்லல்கள் நீங்கி, துன்பங்கள் தொலைந்து, கோடி இன்பங்கள் குவிந்து ஒளி பிறக்கும். இன்பம் சேரும் மகிழ்ச்சி பொங்கும் என எதிர்பார்ப்போமாக!.

தமிழர்கள் நிம்மதியோடும் பாதூகாப்போடும் சுதந்திரத்தோடும் வாழ வேண்டும் என்றால் எங்கள் தாயக மண்ணில் தமிழீழ அரசை மீள்கட்டியெழுப்ப வேண்டும். அந்த நம்பிக்கையுடன் பொங்கல் புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம்.

No comments:

Post a Comment