Tuesday, November 29, 2011

ஈழத்தின் இன்னல் துடைக்க வந்த கால(க்) கடவுளர்கள்!

இன்றைய நாள்,
ஈழத் தமிழர்களின்
வரலாற்று பாதையில்
கால(க்) கடவுளர்களை
நினைவு கூரும்
கண்ணீர் கலந்த நாள்!
எங்கே அவர்கள் என
ஏன் தேடுகின்றீர்கள்?
அட கல்லறைகள் 
எங்கே எனவுமா தேடுகின்றீர்கள்?
எங்கள் உள்ள(க்) கோயிலினுள்
உறவுகள் வாழ்வதற்காய்
உயிர் கொடுத்த
உத்தமர்கள் தூங்குவதை
அறியாது தேடுவது
மடமை அல்லவா?
நாம் சுவாசிக்கும் 
மூச்சுக் காற்றில்
அவர் தம் நினைவுகள் 
பறந்து வந்து
மேனியில் ஒட்டி 
சிலிர்ப்பை தருகின்றதே!
நீங்கள் உணரவில்லையா?
உங்கள் கண்களை 
ஒரு கணம் மூடி
மீண்டும் திறவுங்கள்!
இதோ கல்லறைகள்
சிகப்பு மஞ்சள் கொடி 
கொண்டு அலங்கரிக்கப்பட்டு
கண்ணீரால் கழுவப்படுகின்ற
காட்சியினை(க்) காண்பீர்களே!
சற்று(த்) தொலைவில்
கொஞ்சம் ஓரமாய்
நாம் உங்களோடு
இருக்கிறோம் என
ஒருவர் சொல்லும்
ஓசை உங்கள் 
காதில் விழவில்லையா?
கல்லறைகள் அழித்து - எம்
காவற் தெய்வங்களின்
நினைவு(த்) தடங்களினை
உடைத்து விட்டோம் என
மனித நேயமற்ற
போர் அரக்கர்கள் 
கூக்குரலிடுகையிலும்
அஞ்சாதே என 
அவர்கள் சொல்லுவது கேட்கிறதா?
வீசும் காற்றில் 
தம் சுவாசத்தை அனுப்பி
எம்முள் வீரத்தை தருகிறார்களே!
ஓடும் நீரிலும்
ஓசைப் படமால் நீந்தி வந்து
வாழும் ஈழம் தனை நாம் பார்க்க
ஆசையென வாஞ்சையோடு சொல்கிறார்களே!
வானம், தரை, எம் தாவரங்கள் 
என சூழல் முழுதும் தம்
நினைவுகளை(ச்) சுமந்து வந்து
எம்மோடு பயணிக்கும்
ஈழத்து காவிய நாயகர்களை
அறியாதோராய் இன்று
எங்கெங்கோ தேடுகின்றோமே!
என்ன உங்கள் உள்ளே
அவர்கள் உள்ளார்கள் என
நினைவூட்டுகிறார்களா?
தாம் வாழா விட்டாலும்
தமைப் பெற்ற 
திரு நாடு பகை பிடியிலிருந்து
மீள வேண்டுமென
உயிர் கொடுத்த
உத்தமரை இப்போது
உங்கள் உள்ளத்தில்
கண்டு தரிசிப்பீர்களே!
இது தான் அவர்கள்,
காலப் பெரு வெளியின்
தடித்த நாளிகைகளுக்கு நடுவே
தமிழரின் வாழ்க்கை(க்)
கோலம் சிறக்க
உயிர் கொடுத்த
உன்னத மனிதர்கள் அவர்கள்!
மாவீரர் கல்லறையை அழித்தால்
மக்கள் மனங்களில்
அவர் தம் இருப்பிடமும்
தொலைந்து விடும் என
மதி கெட்டவர்கள் நினைத்திருக்க
நாமின்று எம் மனங்களில் அல்லவா
அவர்களை இருத்தி
பூஜித்து சபதம் எடுக்கின்றோம்!
நேரத்தைப் பாருங்கள்,
5.38 நிமிடங்களாகி விட்டதே, 
இதோ தேசப் புதல்வன் உரை
உங்கள் காதுகளில் விழவில்லையா?
கல்லறைகளில் தூவிட
மலர்களை மனதில் எடுத்து
உரை கேட்டவாறு
நிற்கையில் இப்போது
6.08 நிமிடம் ஆகி விட்டதே!
துயிலுமில்லப் பாடல்
எம் காதுகளில்
கடந்த நினைவுகளை
மீண்டும் தட்டியிருக்கிறதே!
கேட்டீர்களா?
கோயில் மணி ஒலித்து
கல்லறையில் துயிலும்
எம் குழந்தைகளை
துயிலெழுப்புகின்றதே! 
எம் கண்களில் கண்ணீர் வருகையிலும்
காலத்தின் முன்னே
அவர்கட்கு கொடுக்க எம்மிடம்
ஒன்றும் இல்லையே எனும்
கவலையுடன் தானே
நாம் மண்டியிட்டு
எம்மை மன்னியுங்கள் என 
இப்போது அவர்களிடம்
இரந்து கேட்க முடியும்!
வாருங்கள் எல்லோரும் கேட்போம்!
ஒவ்வோர் ஆண்டும் 
எம் வீரத்தை ஓர்மமாக்கி
ஓயாத தமிழர் சேனையின்
வெற்றிச் சேதிகளை அவர்கட்கு 
கொடுத்தோம்- இப்போது
எம் வசம் ஏதும் இல்லையே
என அவர் பாதங்களில்
மண்டியிட்டு அழுகின்றோமா- இல்லை
நாளை ஓர் நல்ல சேதியோடு
உம் வாசல் வருவோம்
என சபதம் எடுக்கின்றோமா?
தான் வாழா விட்டாலும்
தமிழர் தம் வாழ்வு
சிறந்திட தீயாய் எழுந்த 
தீரர்களை நெஞ்சில் நிறுத்தி
வேரோடு அழிந்த 
எம் வாழ்வு 
மீண்டும் சிறக்க
வேகம் கொடுப்போம்!!
 
நன்றி நாற்று 

No comments:

Post a Comment