தமிழக கியூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழீழ உளவுப் பிரிவின் பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டி இது..!
கேள்வி : உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா?
பதில் : என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். தமிழகத்தில் தங்கியிருந்தாலும், இது காலம்வரையிலு் நான் எந்தவிதத் தவறான செயல்பாடுகளிலும் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைது செய்திருக்கிறது. அந்த வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை.
கேள்வி : பிரபாகரனுக்கு எதிரான வரதராஜப்பெருமாளை கொலை செய்யவே நீங்கள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டதாக ஏற்கெனவே தமிழகத்தில் பிடிபட்ட புலிகள் வாக்குமூலம் வெளியிட்டிருக்கிறார்களே..?
பதில் : (சிரிக்கிறார்..) எனக்கு அப்படியெல்லாம் எவ்வித அஸைன்மெண்ட்டும் கொடுக்கப்படவில்லை. புலிகள் எனச் சொல்லி அப்போது போலீஸாரால் கைது செய்ப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்.. அவர்களின் வல்லமை என்ன என்பது போலீஸாருக்கே தெரியும்..
அவர்கள் மூலமாக வரதராஜப் பெருமாளை நான் கொல்ல முயன்றதாகச் சொன்னது வேடிக்கையானது. பிடிபட்டவர்கள் அப்படியொரு வாக்குமூலத்தைக் கொடுத்தார்களா? இல்லை.. வேண்டுமென்றே அப்படியொரு வாக்குமூலம் திட்டமிட்டு வெளியிடப்பட்டதா..? என்பதும் தெரியவில்லை.. புலி உறுப்பினர்களாகப் பிடிபடுபவர்கள் மீது எத்தகைய வழக்குகள் போடப்பட வேண்டும் என்பதையெல்லாம் தமிழக அரசியல்தான் தீர்மானிக்கிறது.
கேள்வி : ஈழப் போர் தீவிரமாக இருந்தபோது நீங்கள் அங்கேதான் இருந்தீர்கள்? போர்க் கொடூரங்களின் நேரடி சாட்சியமாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
பதில் : சிங்கள அரசின் கொடூரம் உலகத்துக்கே தெரியும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு சேர அழிக்கப்பட்டனர். பஸ் மோதி பள்ளி மாணவன் மரணம் என்ற செய்தியை செய்தித்தாள்களில் படித்தால், அது நம் குழந்தையாக இல்லாவிட்டாலும் நம் மனது பதறுகிறது.
ஆனால், ஈழத்தில் கொத்து, கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரம் உலகறிய நடந்தும், சிங்கள அரசைக் கண்டிக்க உலக சமுதாயம் முன் வரவில்லை. மற்றபடி அந்தக் கொடூரங்கள் குறித்து விளக்கிச் சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை.
கேள்வி : பிரபாகரன் தப்பிவிட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தைக் காட்டியது. இதில் எதுதான் உண்மை.?
பதில் : எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது.. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை..
கேள்வி : சரி.. உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்..?
பதில் : (பலமாகச் சிரிக்கிறார்) மிகப் பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்தப் பாதிப்புமில்லை..
கேள்வி : கேணல் ராம், புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறு்பபாளர் கே.பி. உள்ளிட்டோர் சிங்கள சதிக்கு ஆளாகி தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறதே..?
பதில் : சிங்கள அரசு தமிழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒற்றுமையைக் குலைக்க அனைத்துவித முயற்சிகளையும் செய்கிறது. போர்க்காலத்திலும் சிங்கள அரசு இப்படித்தான் சதி செய்தது. அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் இத்தகைய சதிகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி : ஈழத்துக்கான விடிவு கிடைக்க இனியும் வாய்ப்பு இருக்கிறதா..?
பதில் : முகாமில் அடைபட்டுக் கிடக்கும் என்னால் இதற்கென்ன பதில் சொல்ல முடியும்? எத்தகைய அடக்கு முறையும் ஒரு நாள் உடையத்தானே செய்யும்.. – உறுதியுடன் சொல்கிறார் சிரஞ்சீவி மாஸ்டர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment