Wednesday, January 20, 2010

மெராக் துறைமுகத்தில் ஈழத் தமிழர்கள் பேரவலம்: நெஞ்சை உலுக்கும் காட்சிகள்



அவுஸ்திரேலியா நோக்கி அகதி தஞ்சம் கோரி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மெராக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்ட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தமது 100 வது நாளையும் இன்னமும் கடலிலும் கப்பலிலுமே கழிக்கவேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கின்றார்கள். ஈழத்தில் அல்லலுற்ற இவர்கள் தற்போது இந்தோனேசியாவிலும் அல்லலுறுகின்றனர்.






கடுமையான காலநிலை சீர்கேட்டால் அகதிகள் தங்கியிருக்கும் கப்பல் பகுதி பகுதியாக சிதைந்து எந்நேரமும் பெரும் உயிர் ஆபத்தை உண்டுபண்ணக் கூடிய நிலையில் இருக்கின்றது என்று அதிர்வு இணையம் அறிகிறது. குழந்தைகள் பெண்கள் மற்றும் ஓர் கர்ப்பிணி பெண் உட்பட நூற்றுக்கணக்கான அகதிகள் சொறி, சிரங்கு, வயிற்றோட்டம் போன்ற தொற்று நோய் தாக்கத்தினாலும் போசாக்கு குறைப்பாட்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது புதுவிதமான நோய்களுக்கும் உள்ளாகியுள்ளனர். ஆண் சிறுவர்களின் ஆணுறுப்புகளில் கட்டி வளருதல், உருவாகியுள்ள புண் மாறாத நிலை என்பனவும் இங்கு காணப்படுகிறது.








குறிப்பாகச் சிறுவர்கள் இந்நோய்தாக்கத்துக்கு உட்பட்டுள்ளதாக அறியப்படுகிறது, இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களைப் பாருங்கள், அவர்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளனர். ஆரோக்கியமாக இருந்த பல குழந்தைகள் தற்போது பல நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் வசதியாகவும் அவர்களின் பிள்ளைகள் ஆடம்பரமாகவும் வாழும் நிலையில், மெராக் துறைமுகத்தில் எமது உறவுகள் படும் அல்லலைப் பார்க்க யாரும் இல்லையா, இதுதான் தமிழினமா? நாதியற்று அலையவா தமிழன் பிறந்தான் என்ற கேள்வியே மனதில் எழுகிறது.




யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு இவ்வகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்கி இவர்களை பொறுப்பேற்க வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் மீள்குடியேற்றம் சம்பந்தமான ஏதாவது ஓர் தீர்மானத்தின் மூலமாக தீர்வினை வழங்க வேண்டும் அல்லது ஓசியானிக் வைக்கிங் கப்பலின் அகதிகளுக்கு அவுஸ்திரேலிய அரசும் இந்தோனேசிய அரசும் சர்வதேச நாடுகளும் வழங்கிய தீர்வினை ஒத்ததான ஓர் தீர்வினை வழங்க வேண்டும் என்றும் அகதிகள் சார்பாக இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சிற்கு ஊடகங்கள் மூலமாக விடுக்கப்பட்ட செய்தி இன்னமும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




புலம் பெயர்ந்து வாழ்கின்ற எமது சமூகமே இதில் தலையிடவேண்டும், பல தொடர்போராட்டங்களை நாம் நடத்தியுள்ளபோதும் ஐரோப்பாவில் அவுஸ்திரேலிய தூதரகம் முன்னதாக நாம் போராட்டத்தில் இறங்கவேண்டும். இந்த அகதிகளை உடனே நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ள அவுஸ்திரேலிய அரசை நாம் நிர்ப்பந்திக்கவேண்டும், தமிழ் சட்ட வல்லுனர்கள் இது தொடர்பாக ஆராய்வது நல்லது. இவர்கள் வாழும் கப்பலில் எந்நேரமும் நீர் புக இருப்பதால், இவர்கள் அனைவரும் சிலவேளைகளில் இறக்க நேரிடலாம்.

பல தமிழ் அமைப்புகளும், ஸ்தாபனங்களும் நற்தொண்டு நிறுவனங்களும் இருந்தும் இவர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள்? ஜனாதிபதி தேர்தலில் யார்வெல்வார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலை என்ன, வட்டுக்கோட்டைத் தீர்மானம் தேவையா, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னசெய்யப் போகிறது என பல விடையங்கள் குறித்து நாம் விவாதிப்பதும், அதில் எமது நேரத்தை வீண்விரையம் செய்வதை விடுத்து, முதலில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கும் எம்மின மக்களைக் காப்பாற்ற முடியுமா என நாம் ஒரு நிமிடம் சிந்திப்பது நல்லது.
நாம் என்ன செய்ய போகிறோம்?

No comments:

Post a Comment